×

ஊட்டச்சத்து பானம் குடித்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை

பெரம்பூர்: கடையில் விற்கப்பட்ட ஊட்டச்சத்து பானத்தை வாங்கி குடித்த வாலிபருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வியாசர்பாடி பி.பி.ரோடு கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (29). திருமண நிகழ்ச்சிகளுக்கு ஆர்டரின் பேரில் பிரியாணி செய்து கொடுத்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில், வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள குளிர்பான கடையில், பிரபல நிறுவனத்தின் 3 பாக்கெட் ஊட்டச்சத்து பானம் வாங்கி, அதில் 2 பாக்கெட்களை குடித்துள்ளார். மீதமுள்ள ஒரு பாக்கெட்டை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் ஜாகீர் உசேனுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் வாங்கி வந்த ஊட்டச்சத்து பானத்தின் பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது, அது கெட்டுப்போனது என தெரியவந்தது.  

இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஜாகீர் உசேனை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ஜாகீர் உசேனின் உறவினர்கள் கூறுகையில், ‘‘பிரபல நிறுவனத்தின் தயாரிப்பான இந்த ஊட்டச்சத்து பானம் காலாவதி ஆவதற்கு இன்னும் 2 மாதங்கள் உள்ளதாக  பானத்தின் பாக்கெட்டில் பிரின்ட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதை பிரித்து பார்த்தால், கெட்டுபோனது தெரியவந்துள்ளது.

இங்குள்ள பல கடைகளில் தரமற்ற குளிர்பானம், உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இதனை கண்டுகொள்வதே இல்லை. இதனால், இதனை வாங்கி சாப்பிடும் நபர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. குறிப்பாக, குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, உணவு பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்து, தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழிக்க வேண்டும். இவ்வாறு தரமற்ற மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : adult ,
× RELATED 221 கைதிகளுக்கு மதிப்பீட்டு தேர்வு